Saturday, March 8, 2025

பெண் - ஒளிவிளக்கு

களம் கண்டு வீரம் பறைசாற்றும்
வேலுநாச்சியாய்...

ஆண்டவனுக்கே அன்னையாய்
அவதரித்த காரைக்கால் அம்மையாய்...

சித்தார்த்தன் புத்தனாக சிரமேற்றப் போது
கரம் பிடித்த யசோதரை அன்போடு
கைகாட்டினாள் – 

அன்பை போதியென
தவக்கோலம் தரித்து அன்னை சாரதா...

நிலாச்சோறு ஊட்டிய நீ,
நிலவிற்கே உலா சென்று வருகிறாய்...

வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும்
உந்தன் வசமே...


கைவிரல் எண்ணிக்கையில் அடங்கிவிடுகிறது
திருமாலின் அவதாரங்கள்கூட...

காத்திருக்கும் சவால்களில் தினம் தினம்
பூத்துக் கொண்டிருக்கிறாய் புது புது அவதாரமாய்...

எண்ணிலடங்கா அவதார எண்ணிக்கை,
பெண்களின் பெருமை பறைசாற்றும் நாளில்...

அறிவால் உலகை ஆளும் ஒளிவிளக்கு நீ...
அன்னை, உமக்கு அன்பான வாழ்த்துக்கள்!

பி . இராஜசேகர்

Tuesday, March 4, 2025

வைகறை காதல்

கரைததும்பும் காதலில்

வைகறை தாண்டா பொழுது...

ஆழிப்பெருக்கெடுத்த  ஊழி தாண்டவாமாய்

உன் காதல் தாண்டவம்!



மேகமாய் மோகம் சிதறிகிடக்க 

தாகம் தனித்தன இதழ்கள் 

இமைகள் உறக்கத்தில்  இதழ்கள் கிறக்கத்தில்

காதல் யாகத்தீயில் நான்

வேள்விகள் அனைத்தும் உனை அனைத்து கொள்ள

நீயோ!!! அணை போட்டுகொள்(ல்)கிறாய்...


Monday, March 3, 2025

போதையின் பாதையா ???

ஒரு கோப்பைத் தானேயென

ஆரம்பம் கொள்கிறாய் ஆதியில்....

வாழ்வின் வெற்றிக் கோப்பையைத் தவறவிட்டு

பாதியில் தடம் மாறுகிறாய் உன் பாதையிலிருந்து

பற்றுதலின்றி வாழ்வை பறிகொடுக்கிறாய்...


புகை பகையெனத் தெரிந்தும்

வகையாய்ச் சிக்கிக்கொள்கிறாய்

வலையில்.....

இது எமனின் பாசவலை

எவராலும் காப்பாற்ற முடியாது உனை..


"மது உயிருக்கு கேடு"

வாசகத்தின் அர்த்தம் கொள்ளாத நீ

அஸ்த்தமாக்கி கொள்கிறாய்

உன்னையே நீ கொல்கிறாய்.


உன் பெயர் பிரதியெடுக்க

சரித்திரத்தின் பக்கங்கள் காத்திருக்க- நீயோ

போதையின் பக்கத்தில்

தரித்திரம் கொள்கிறாய்..உன்

சரித்திரம் கொல்கிறாய்.


சீ ... என நீ புறந்தள்ள மறுத்தால்

அடச்சீ ... என அகிலம் புறந்தள்ளும்

நினை .. நல்லதை நினை

செய் .. நல்லதைச் செய்

நல்ல மகனாய் வீட்டிற்கும்

நல்ல குடிமகனாய் நாட்டிற்கும்


கற்றவன் நீ ....

கறையெதுவெனத் தெரிந்து

கரையிட்டு வாழ்ந்தால்

மறை போற்றும் மாமனிதனாகலாம்..


பி. இராஜசேகர்