Sunday, September 21, 2025

இரவின் விளிம்பில்

 

உன் நினைவுகளோடு
சண்டையிட்டு, சண்டையிட்டு,
இரவின் விளிம்பில்
நிற்கிறேன் நான்...

இரவின் மடியிலாவது
இனியொரு இடம் கொடு!

 

என் காதலை
நீ விலக்குவது புரிகிறது எனக்கு,
நான் விளக்குவது

புரிகிறதா உனக்கு...?

 

என் தொட்டில் உறக்கம் – இப்போது
கட்டிலில் இல்லை,
காட்டிலாவது கிடைக்குமா எனக்கு?

 

முப்பொழுதும் உன் நினைவுகள்...
அது எப்போது நிறைவடையும்?

Sunday, July 6, 2025

இன்னும் கொஞ்சம் காதலித்திருக்கலாம்

இன்னும் கொஞ்சம்  
காதலித்திருக்கலாம் நீ...  
கொஞ்சம் மட்டும்  
காதலித்திருக்கலாம் நான்...

கன நேர அமைதியில்  
காணத் தொலைந்த இதயம்  
ஏனோ...  
உன் நினைவுகளில்  
லேசாகிறது...

மாநகரப் பேருந்தின்  
காலை நேர நெரிசல்,  
தடுமாறும் படி பயணம்போல் தொடர்கிறது —  
வாழ்க்கை சுமைகளுக்கு இடையிலான  
உன் மீதான காதல்...

எங்கே வருமென்று தெரியாத  
எதிர்பாராத போக்கில்....


Saturday, March 8, 2025

பெண் - ஒளிவிளக்கு

களம் கண்டு வீரம் பறைசாற்றும்
வேலுநாச்சியாய்...

ஆண்டவனுக்கே அன்னையாய்
அவதரித்த காரைக்கால் அம்மையாய்...

சித்தார்த்தன் புத்தனாக சிரமேற்றப் போது
கரம் பிடித்த யசோதரை அன்போடு
கைகாட்டினாள் – 

அன்பை போதியென
தவக்கோலம் தரித்து அன்னை சாரதா...

நிலாச்சோறு ஊட்டிய நீ,
நிலவிற்கே உலா சென்று வருகிறாய்...

வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும்
உந்தன் வசமே...


கைவிரல் எண்ணிக்கையில் அடங்கிவிடுகிறது
திருமாலின் அவதாரங்கள்கூட...

காத்திருக்கும் சவால்களில் தினம் தினம்
பூத்துக் கொண்டிருக்கிறாய் புது புது அவதாரமாய்...

எண்ணிலடங்கா அவதார எண்ணிக்கை,
பெண்களின் பெருமை பறைசாற்றும் நாளில்...

அறிவால் உலகை ஆளும் ஒளிவிளக்கு நீ...
அன்னை, உமக்கு அன்பான வாழ்த்துக்கள்!

பி . இராஜசேகர்

Tuesday, March 4, 2025

வைகறை காதல்

கரைததும்பும் காதலில்

வைகறை தாண்டா பொழுது...

ஆழிப்பெருக்கெடுத்த  ஊழி தாண்டவாமாய்

உன் காதல் தாண்டவம்!



மேகமாய் மோகம் சிதறிகிடக்க 

தாகம் தனித்தன இதழ்கள் 

இமைகள் உறக்கத்தில்  இதழ்கள் கிறக்கத்தில்

காதல் யாகத்தீயில் நான்

வேள்விகள் அனைத்தும் உனை அனைத்து கொள்ள

நீயோ!!! அணை போட்டுகொள்(ல்)கிறாய்...


Monday, March 3, 2025

போதையின் பாதையா ???

ஒரு கோப்பைத் தானேயென

ஆரம்பம் கொள்கிறாய் ஆதியில்....

வாழ்வின் வெற்றிக் கோப்பையைத் தவறவிட்டு

பாதியில் தடம் மாறுகிறாய் உன் பாதையிலிருந்து

பற்றுதலின்றி வாழ்வை பறிகொடுக்கிறாய்...


புகை பகையெனத் தெரிந்தும்

வகையாய்ச் சிக்கிக்கொள்கிறாய்

வலையில்.....

இது எமனின் பாசவலை

எவராலும் காப்பாற்ற முடியாது உனை..


"மது உயிருக்கு கேடு"

வாசகத்தின் அர்த்தம் கொள்ளாத நீ

அஸ்த்தமாக்கி கொள்கிறாய்

உன்னையே நீ கொல்கிறாய்.


உன் பெயர் பிரதியெடுக்க

சரித்திரத்தின் பக்கங்கள் காத்திருக்க- நீயோ

போதையின் பக்கத்தில்

தரித்திரம் கொள்கிறாய்..உன்

சரித்திரம் கொல்கிறாய்.


சீ ... என நீ புறந்தள்ள மறுத்தால்

அடச்சீ ... என அகிலம் புறந்தள்ளும்

நினை .. நல்லதை நினை

செய் .. நல்லதைச் செய்

நல்ல மகனாய் வீட்டிற்கும்

நல்ல குடிமகனாய் நாட்டிற்கும்


கற்றவன் நீ ....

கறையெதுவெனத் தெரிந்து

கரையிட்டு வாழ்ந்தால்

மறை போற்றும் மாமனிதனாகலாம்..


பி. இராஜசேகர்







Tuesday, February 4, 2025

மௌனம் பேசும் காதல்



எல்லாம் மாறுகிறது வாழ்க்கையில்

அசல் எது போலி எதுவென

அறிய முடியாதவையாய்...

எல்லா வினாக்களுக்கும் விடையுண்டு

இந்த AI உலகில் உன் மனதைத் தவிர...


நான் யாரென்று எனக்கும்

நீ யாரென்று உனக்கும் புரிதலில்லாத போது

நாம் யாரென்று உலகம் சொல்கிறது.


நீர் தேடும் வேராய்

உன் நினைவுகள் எனக்குள் விரவுகின்றன ..

கடல் நீராய்க் கனவுகள்

ஏனோ என் காதல் தாகம் தீர்க்கவில்லை


ஒரு துளிபுன்னகைச் சிந்திவிடு எனக்குள்

முத்தாய் பிரசவிக்கிறேன் உனக்குள்

நம் காதலை 

மொத்தமாய் உனாக்காகவே...


சத்தங்களும் மௌனமாய்

ஒன்றோடொன்றுச் சேராக் கடல் அலையாய்

என் கனவுகளும் உன் நினைவுகளும்...

தூரத்துக் கடலும் வானமும் கைகோர்பதுபோல்

என் நினைவுகளும் கனவுகளும்..



உன்னில் நானா? என்னில் நீயா?...

யார் யாரென்று விவாதிக்க விரும்பவில்லை

எப்பொழுதேனும் எதேச்சையாகச் சந்தித்தால்

கண்ணில் ஒரு புன்னகை உதிர்த்துவிடு.

என் காதலோடு வாழ்ந்துவிடுகிறேன்...


                                                            கால் நினைவுகளோடு மௌமாய்







Wednesday, January 1, 2025

2025 இனிய புத்தாண்டு வாழ்த்துகள்


இனிய புத்தாண்டே வருக!!!

கைகளில் தவழும் குழந்தையாய்

காத்திருக்கிறேன் அன்போடு

நேற்றைக்கு (2024) விட்டுச்சென்ற

காலநினைவுகளின் பூ சாரலின்

கனவுகளாய்ப் பூத்திருக்கிறாய் நீ!.

 

ஒரு நாள் திருநாள் அல்ல

உன் முகம் பார்த்தே என் 365 நாட்களும்

கனவுகளிலிருந்து விழித்தெழும்....

 


எட்டு திக்கும் ஏக்கங்கள் தான்

காலங்கள் மாறாத எனச் சில கனவுகளுக்காக

சுட்டும் திசையெல்லாம் விடைகான

சுடர் விடும் தீபமாய்

இடர் களைந்து இன்னல் களைந்து இருள் நீக்கி

படரட்டும் வாழ்வில் மகிழ்ச்சி.


தொடரட்டும் இராஜாவாய் வெற்றி கீர்த்திகள்

பாடட்டும் வெற்றியின் கீர்த்தனைகள்

பி.இராஜசேகர்