Thursday, November 14, 2013

காதல் தேசம்



அவ்வப்போது அவளின் அத்துமீறல்கள் நடக்கும்
எந்தன் கனவினில்...... 
ஆதரமாய் எந்தன் உளறல்கள்...
எத்தனை தான் சொன்னாலும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எந்தன் நினைவுகள்
அவள் உன்னை ஆக்கிரமித்துவிட்டாளென்று..

நான்
பதிலடிகொடுக்க நினைத்தால்
பகலவன் துணைகொண்டு
பதுங்குகுழி அமைக்கிறாள்.
காட்சிகளாய் அவள் என்னைக் கடக்க
கனவுக்குள் செல்கிறது என் நினைவுகள்

கன்னியவள் வைத்தது
காதல் வெடியா? கண்ணி வெடியா?
கனவுகளிலிருந்து கலைக்க நினைத்தாலே – என்
நினைவுகள் சேதாரமாகிவிடுகிறது
சேதாரத்திற்கு ஆதாயமாய் இதயத்தைப் பரிசாக்கினாள்...

இந்தியா பாகிஸ்தான் போலில்லாது
எங்களுக்குள் அவ்வப்போது அன்பு சண்டைகள்;
வேலியின் எல்லைக்குள்தான்
எங்கள் இருவரின் ஊடுறுவல்கள் நடக்கும்.

ஊடல்கள் தோன்றும்போதெல்லாம்
மூன்றாம் நாடுபோல் முழுமதி சமரசதிற்கு
மூக்கை நுழைக்கும் –நான்
வேண்டாமென்றால் வெடுக்கெனக் கோபப்படுகிறாள்
நான் சொன்னது நிலவைத்தானே .... இவள் ஏன் ??

எங்கள் சமாதான பேச்சுகள் 
ஆக்ரா கரையில் நடப்பதில்லை
ஆதலால் எப்போதும் தோற்பதில்லை
இருவரும் சேர்ந்தே பயணிக்கிறோம்;
வாழ்க்கை பேருந்தில்
லாகூர் பயணம் போல் தோற்பதேயில்லை
இவண்
காதல் தேசத்தின் சக்கரவர்த்தி

Wednesday, November 13, 2013

பயணம்

சில தொலைவுகள்
பயணித்தோம் இருவருமே
தண்டாவாளமாய்
தனிமையில்  அருகருகே

எந்த சந்திப்பு மாற்றியதோ
இருவரையும்.....
உன் நினைவுகளோடு  நானும்..
என்  கனவுகளோடு நீயும்
பயணிக்கிறோம்
தனியாக

எதிர்பார்ப்பு

உன் எண்ணங்கள்  சமட்டியானாலும்
உன் வார்த்தைகள்  உளியாகட்டுமே
நான் சிலையாகிறேன்

இவண்
நீ சிற்பியாக வேண்டுமென 

என் வாழ்க்கை

சேர்க்க இயலா புள்ளிகளின் கோலம்
ரசிக்க இயலா பாதைகளின் பயணம்
நினைக்க இயலா நினைவுகளின் சிதறல்கள் 
இது  துடிக்க இயலா மனதின் வெடிப்பு

Saturday, November 9, 2013

சின்னச் சின்ன ஆசைகள்




இலட்சங்கள்தேடும் மனிதர்களிடையே இலட்சியத்தைத்தேடும் ஆசை
ஆசைகள் தேடுகின்ற உலகினிலே அன்பை தேடுகின்ற ஆசை
தீபம்காட்டும் ஒளியினிலே தீயவை அழிய ஆசை
காசுக்காக வாழும் மனிதர்களிடையே கடமைஉணர்வை காண ஆசை


வேடம்போடுகின்ற மனிதர்களிடையே வெள்ளைஉள்ளம் காண ஆசை
இனிமை கொஞ்சும் வாழ்வினிலே ஈதல் சிறக்க ஆசை
பணம் தேடுகின்ற வாழ்வில் பகுத்தறிவு தேட ஆசை
குறைகாணும் வாழ்வில் குணம் காண ஆசை


விடைகான உலகில் விடியலை நோக்கி ஆசை
தாவுகின்ற மனதில் தடுமாற்றம் நீங்க ஆசை
பேசுகின்ற மொழிகளில் பேதை உள்ளம் காண ஆசை
கூடுகின்ற உள்ளங்கள் குருவி போல் வாழ ஆசை


பரந்த மனதிற்குள் பசலை படியாது வாழ ஆசை
ஒருவிழி அழுதால் மறுவிழி மருந்துபோட ஆசை
கருவிழிப் பார்வையில் கற்பனைகள் உயிர் வாழ ஆசை
அலைகொண்ட மனதில் அணையொன்று போட ஆசை

சோதனைகொண்ட வாழ்வில் சொர்க்கம் காண ஆசை
காசைதேடுகின்ற உலகினில் காதலை தேடுகின்ற ஆசை
இவண்
ஆசைகளுடன்