Wednesday, September 25, 2013

தமிழ் மாத காதல்

தமிழ் மாத காதல்
மரமெல்லாம் குளிரும் மாசியாய்!
நினைவெல்லாம் குளிர்ந்திருந்தது
என் நெஞ்சம் அன்று...

பங்குனியில் நீ வீசிசென்ற பார்வையில்

எங்கு நீயென ஏங்க வைத்தாய்.
கங்குபோல் கனன்று கொண்டிருக்கிறது
தங்குமோ? தாங்குமோ? என்னுயிர்..

சித்திரைமாத நிலமாய் சிந்தையெல்லாம் கொதிக்கிறது
நித்திரையில்லா  புழுங்குகிறது நெஞ்சம்
என் நினைவுகளும் காதலால் ....

வைகாசி வானமாய் அவ்வப்போது
ஆசைகாட்டிசெல்கிறது உன் விழிகள்.
கைவீசி சென்றவன்,கைகோர்த்து நடைபழக கற்றுக்கொண்டிருக்கிறேன் உன்னால்...

ஆனிமாத நிகழ் ஆலங்கட்டியாய்
திடீர்திடீரென திகைப்படைய செய்கிறது
உன் செய்கைகள்  எனக்குள்..

ஆடிப்பட்டம் தேடிவிதையென பழமொழியாய்
கோடி ஆசைகளுடன் காத்திருந்து- என்
நெஞ்சத்து ஆசையின் மஞ்சத்து கனவுகளினை மடாலக்கினேன் ....

ஆவணித்திங்கள் வரை எனை அலையவிட்டு
என்தாவணிக் கனவுகளுக்கு தலையாட்டினாய்
மேவளி நீயென நான் மெட்டமைத்து நின்றேன்
கோமாளி வித்தைக்காரனாய் நெஞ்சம் குதித்தது.

பெய்து பிறக்குமா ? காய்ந்து பிறக்குமா?
கண்கட்டி வித்தை காட்டும் புரட்டாசி
கார்காலமாய் கலங்கிநிற்கிறது
வீட்டினில் நம் காதல் ..

அடைமழையெனும் ஐப்பசியாய்
அழுகையும் ஆங்காரத்துடன்
அடம்பிடிக்கிறது காதல் நம்வீட்டில்
விடாது குடைபிடிக்கிறது...

கார்த்திகைமாத  கார்காலமாய்
கரைததும்பும் பொய்கையும் நுரைபொங்கும்புணலுமாய்
நிறைததும்பும் நம்காதலுக்கு மறைகள் சாட்சியாய்  உரைகள் வாசிக்கப்பட்டன  உறவுகள் புடைசூழ

பாசுரங்கள் பாடி மகிழ்ந்த ஆண்டளைப்போல்
தேன்சுரம் மீட்டி திளைத்து திரிந்தோம்
தித்திக்கும் மார்கழி நன்னாளில்.

தைமகள் வந்தாள்.. பூமகள் புடைசூழ
குணமகள் என் வாழ்க்கை வசந்ததிற்கு...

இவன்
பூமகள் பொழிவு கண்ட
புன்னகையுடன்
                                                    தம்பிபையன்~